சென்னை: மேற்கு தாம்பரம் அடுத்த அஞ்சுகம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு, கடும் இன்னலை எதிர்கெண்டுள்ளனர்.
அஞ்சுகம் நகரில் வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (நவ.10) அப்பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அதிமுக செய்தித் தொடர்பாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை அப்சரா ரெட்டி அப்பகுதியில் வசிக்கும் 150 பேருக்கு போர்வை மற்றும் பிரெட் பாக்கெட்டுகளை வழங்கினார்.
இது அரசியல் செய்யும் நேரம் இல்லை
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியினர், திருநங்கைகளை ஒதுக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாடு அரசுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு உதவ வேண்டும். இது அரசியல் செய்யும் நேரம் இல்லை.
மழை, புயல் பாதிப்புகள் ஏற்பட்ட பின்தான் நடவடிக்கை எடுக்கின்றனர். அரசு முன்கூட்டியே ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்தால் பெருமளவு பாதிப்புகளைத் தவிர்க்கலாம்' என்றார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்குப் பதில் அளித்த அவர், 'கட்சித் தலைமை ஒன்று கூடி , முடிவு எடுத்தால் அது சரியான முடிவாக இருக்கும். அதிமுகவிற்கு யார் தலைமை தாங்கினாலும் அவர்கள் பின்னால் ஒட்டுமொத்தத் தொண்டர்களும் நிற்பார்கள்' என்று கூறினார்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை