சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை ஒட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆலயத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், “திமுக ஆட்சியில் ஆறுகள், காப்புக்காடுகள் காணாமல் போகும். மேலும் மத்திய அரசின் விதிப்படி விதி மீறி அரசாணை போடப்பட்டுள்ளது. காப்புக்காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசுகையில், “ஓபிஎஸ் மகன் மந்திரி பதவியை யாரும் தடுக்கவில்லை. நாங்கள் தடுத்தது போல கருத்து சொல்கிறார். அவர் முகத்திலேயே தெரிகிறது அவர் பொய் சொல்கிறார் என்று. மேலும் அதிமுகவின் கட்சிக் கொடியை உபயோகம் செய்வது, கட்சிக் கரை கொண்ட வேட்டியை கட்டுவது இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடக்கூடாது என்பதற்காக முறையான நோட்டீஸ் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து தரப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும், “நாங்கள் தான் அதிமுக. ஓபிஎஸ்-ஐ பொதுக்குழு தான் நீக்கியது. எனவே, அவர் அதிமுகவுக்குத் தொடர்புடையவர் அல்ல. எப்படி அவர் கட்சிக்கொடியை பயன்படுத்தலாம். இது தொடர்பாக எல்லா சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம். 2024 தேர்தலில் ஓபிஎஸ் கவுன்சிலராக கூட வர முடியாது” எனக் கூறினார்.
பின்னர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக கூட்டணியில் தான் தலைமை அமையும். பொய்யான செய்தியை யாரும் பரப்ப வேண்டும். 1980, 90-களில் ஓபிஎஸ் என்ற பெயர் யாருக்குமே தெரியாது. இவருக்கு தேனி தான் தெரியும். சென்னையே தெரியாது. நாங்கள் ஏன் கட்சி தொடங்கனும். வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என ஒரு கட்சியைத் தொடங்கி ஓபிஎஸ் அவரது பலத்தைக் காட்டட்டும்” என்றார்.
மேலும், “ஸ்டாலின் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி அளிக்காமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கரூர், கொளத்தூர் எல்லாம் மர்ம தேசமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை கொல்லும் ஆட்சி நடத்தி வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.