கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, பல்வேறு இடங்களில் பொது மக்களை காவல் துறையினர் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சாத்தான்குளம் வணிகர்களின் மரணம், காவல் துறையினர் தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட எட்டயபுரம் இளைஞர் என தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் காவல் துறையின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. சமூக வலைதளங்களிலும் காவல் துறையினருக்கு எதிரான கருத்துகள் அதிகளவில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் காவல் துறையினருக்கு ஏடிஜிபி ரவி அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினர் பொதுமக்களை தாக்குவது தொடர்பான வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. பொதுமக்கள் குற்றமே செய்திருந்தாலும் காவல் துறையினர் தாக்குவதை விட சுமூகமாக பேசி தீர்த்து வைக்க வேண்டும்.
அனைத்து காவல் நிலையத்திலும் மகாத்மா காந்தி படத்தின் கீழ் காவலர்கள் பொதுமக்களின் சேவகர்கள் என்பது குறிப்பிட்டு இருக்கும். அதேபோல் காவல் துறை பொதுமக்களின் நண்பர் என்பதை புரிந்து நடக்கவேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தைதான் காவல் துறையினர் சம்பளமாக பெறுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஒரு சில காவல் துறையினர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதால், ஒட்டுமொத்த காவல் துறையினருக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது. பொதுமக்கள் காவல் துறையினரை விரோதிகளாக பார்க்கும் போக்கு நிலவுகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களில் காவலர்கள் ஈடுபடும்போது உடனடியாக 100 மற்றும் காவலன் செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க வேண்டும்.
பெண்கள் கொலை குற்றவாளியாகவே இருந்தாலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல கூடாது. சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர்கள் குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஆறப்போட்டால் அமைதியாகிவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்' - உதயநிதி