தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதலாக 133 மருத்துவமனைகளை சேர்த்து அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களுக்காக 2016ஆம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ சேவை பெறலாம். சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை மருத்துவ சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு காப்பீட்டு திட்டத்தில் கரோனா சிகிச்சையையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு, 2021 ஜூன் 30ஆம் தேதி வரை காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய காப்பீட்டு திட்டத்தில் மேலும் 133 மருத்துவமனைகள், 29 கூடுதல் சிறப்பு மருத்துவமனைகளை இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைகளை சேர்ப்பது குறித்து மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர், கருவூலத் துறை ஆணையர், நிதித்துறை இணை செயலர், பொது சுகாதார இயக்குநர் ஆகியோர் கொண்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று புதிய மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.