சென்னை: பிரபல மாடலான மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகையான மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் இருவரும் ஜாமின் பெற்ற நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றபோது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல அவர் எங்குள்ளார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவரது குடும்பத்தாரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்காட்டுதாங்கலில் தங்கியிருந்த மீராமிதுன் தன்னை அழைத்து போலீசார் கைது செய்ய உள்ளதாக தொடர்ந்து புலம்பி வந்ததாகவும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் மீரா மிதுன் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மன உளைச்சலில் இருந்த மீராமிதுன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன அழுத்தம் மற்றும் கைது நடவடிக்கைக்கு பயந்து திடீரென ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 வருடங்களாக வீட்டிற்கு வராமல் பெங்களூரில் தங்கி வந்த மீராமிதுன், தன்னை பற்றியே அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவார் என குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுன் பயந்து பெங்களூரில் பதுங்கி இருப்பதை அறிந்து அவரது நண்பர்களிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரியதாகவும், போலீசாரிடமும் தகவல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீசார் பத்திரமாக மீட்டு வருவார்கள் என எதிர்பார்த்தபோது, ஊடகங்களில் பெங்களூரில் மீராமிதுன் பதுங்கி இருப்பதாக வந்த செய்தியை கேட்டு மீராமிதுன் வேறு இடத்திற்கு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர் கைது நடவடிக்கையினால் மீராமிதுன் மன உளைச்சல் ஏற்பட்டு அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே மீரா மிதுனின் நண்பர்கள் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து மீராமிதுன் இருக்கும் இடத்தை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு ஒப்படைக்க வேண்டும் என தாய் சியாமளா புகாரில் தெரிவித்துள்ளார்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரை காணவில்லை என தற்போது அவரது தாயாரே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துருவா சர்ஜா நடிக்கும் பான் இந்தியா படம் ’கேடி’