சென்னை: 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு, ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த கண்காட்சியில் புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான படைப்புகளை எளிதாகப் பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டு அனைத்து விதமான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சினிமா ரசிகர்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ப்யூர் சினிமா அரங்கு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் தினமும் நடைபெறும் இலக்கிய கூட்டத்தில் எழுத்தாளர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்வர். இதில் கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணன், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் தவறு செய்து விட்டார் அவரிடம் குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை என்று பேசி உள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, "பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த நாவலுக்கு உண்மை செய்துள்ளதா என்று பாருங்கள். எழுத்தாளர் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் சோழ நாகரிகத்தின் நீட்சியாக என்னவெல்லாம் இருக்கிறதோ, அதனை நேர்மையாக பதிவு செய்திருப்பார். ஆனால் பொன்னியன் செல்வன் படத்தில் அது இருக்கிறதா என்றால் ஒரு விமர்சகராக என்னைப் பொருத்தவரை இல்லை என்பேன்.
100 வருடம் யாருமே எடுக்காத இப்படத்தை இவர்கள் எடுத்து முடித்துள்ளனர் அது சாதனை. ஆனால் உடை, கட்டிட அமைப்புகள், மனிதர்களின் நிறம் எதுவுமே பதியப்படவில்லை. இப்படத்தில் பயன்படுத்திய உடை, நகை எல்லாம் வடமாநிலத்தவர் பயன்படுத்துவது. இலக்கியம் திரைப்படமாகும் போது அங்கு ஒரு இலக்கியம் மலர வேண்டும். ஒரு நாவலை எப்படி திரைப்படம் ஆக்க வேண்டும் என்று எனக்கு மிகப் பெரிய உதாரணமாக இருந்தது முள்ளும் மலரும் தான்.
வாசிப்பின் சலனங்களாக முள்ளும் மலரும் தந்த அந்த நேர்மையை தமிழ் சினிமாவில் எனக்கு வேறு எந்தப்படமும் தரவில்லை. மணிரத்னம் இயக்கிய மௌனராகம் திரைப்படம் ஜெயகாந்தனின் கதையின் பாதிப்பு தான். அப்படம் மிகச்சிறந்த இலக்கியமாக திரையில் வந்தது.
அந்த கலைஞன் பொன்னியின் செல்வன் படம் எடுக்கும் போது எங்கு போனார்?, ஏன் குறைந்தபட்ச அணுகுமுறை கூட இல்லாமல் போச்சு?, ஒரு இலக்கிய படைப்பை திரைப்படமாக்கும் போது குறைந்தபட்ச நேர்மையை கூட அணுகாமல் வணிகரீதியான கலவையாக அப்படத்தை வடிவமைத்ததில் எனக்கு மிகப் பெரிய வருத்தம். இயக்குநர் பாலாவும் நானும் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள். பாலாவுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது.
ஆனால் பாலு மகேந்திராவிடம் சேர்ந்த பிறகு புத்தகம் தொடர்பான விஷயங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டு நான் கடவுள், பரதேசி என்ற இரண்டு நாவல்களை படமாக எடுத்து சாதனை படைத்து விட்டார். அதுவும் நேர்மையாக படைத்துவிட்டார்" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யார் இந்த கேப்டன் மில்லர்? கதாநாயகனை செதுக்கிய கதையின் நாயகன்!