சென்னை: மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான (டாஸ்மாக்) கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாகவும், குளிர்படுத்தப்பட்ட பீர் பாட்டில்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் 2,822 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனவும்,
852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதே புகாருக்கு துணை போன 1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து 4.61 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
மேலும், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாகக் கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு FIR போடப்பட்டுள்ளது. மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் பார் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக பார் நடத்தி மதுபானம் அருந்த அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் நாமதேசியா..': அமைச்சர் சமஸ்கிருதத்தில் செய்த அர்ச்சனை