ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் பஜனை கோவில் தெருவில் முனுசாமி (65) என்பவர் வசித்துவந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்தார். மேலும் அம்பிகா (30) என்ற மகளும், பிரபாகரன் (28) என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில், அம்பிகா திருமணம் முடிந்து தனது கணவருடன் ஆற்காட்டில் வசித்துவருகிறார். பிரபாகரன் திருமணம் முடிந்து தன் மாமியார் வீட்டோடு ஒரத்தூரில் வசித்துவருகிறார். இதனால் முனுசாமியும் மாரியம்மாளும் நாவலூரில் உள்ள பஜனை கோவில் தெருவில் வசித்துவந்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்பாக மாரியம்மாளும் இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக இருந்த முனுசாமி செக்யூரிட்டி வேலை செய்து தனது பிழைப்பை நடத்திவந்தார்.
வயது முதிர்ச்சி காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் உணவுக்குக்கூட வழி இல்லாத சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கைவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான முனுசாமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் இறந்து நான்கு நாள்களான நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் இறந்து அழுகிய நிலையிலிருந்த முனுசாமியின் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'இனவெறியர் எனக் கூறியதற்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்'