சென்னை: ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனம், பல கோடி மோசடி செய்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 81 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபி ராமன் மற்றும் மைக்கேல் ராஜ் ஆகியோர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டுமே கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகரனுக்கு, வருவாய்த்துறை மூலம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன்ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவில், ராஜசேகர் ஒரு ஆடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினருடன் சேர்ந்து உரியவர்கள் அனைவருக்கும் பணத்தை 100% திருப்பி தருவோம்.
மேலும், பொருளாதார குற்றத் தடுப்பு காவல்துறையினர் சோதனையின் பொழுது, பல்வேறு இடங்களில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த பணம் கணக்கில் காட்டப்படவில்லை. நிறுவனத்தை நம்பியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஓரிரு தினங்களில் பணத்தை முழுவதுமாக திருப்பிக் கொடுத்து விடுவோம்” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு நிறுவனம் அலுவலகம் முன் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்!