சென்னை: ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் இளம்பெண் அஸ்வினி (20). இவர் படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக இளம்பெண் பியூட்டிசனுக்குத் தேவையான அழகு சாதன பொருட்களை சமூக வலைதளங்களில் தேடி வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு நபர் அறிமுகமாகி நட்பாக பேசி வந்துள்ளார்.
பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு அஸ்வினியை மிகவும் பிடித்திருப்பதாக கூறிய அந்த நபர், தமிழ்நாடு திரும்பியவுடன் அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக அஸ்வினிக்கு லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது என நினைத்து அஸ்வினி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து அஸ்வினிக்கு வாட்ஸ் அப் காலில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 06) அஸ்வினியை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் 15 ஆயிரம் அமெரிக்கா டாலர் பரிசாக அனுப்பி இருப்பதாகவும், சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருப்பதாகவும், பணம் செலுத்தினால் அந்த பார்சல் உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என ஆசை வார்த்தை கூறி, தான் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
மேலும், பணம் செலுத்தவில்லை என்றால் பெறுநர் முகவரியில் உங்கள் பெயர், விவரம் உள்ளதாகவும் வெளிநாட்டு காவல் துறையினர், சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன், உங்களை கைது செய்து விடுவார்கள் என அஸ்வினியை அந்த நபர் மிரட்டியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்நபரே சுங்கத்துறை அதிகாரி போல வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினியிடம் பேசி கிப்ட் பார்சலுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பயந்த அஸ்வினி இரண்டு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
மேலும் 45 ஆயிரம் கேட்டு அந்த நபர் அஸ்வினிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் அஸ்வினிக்கு வேறு வழியின்றி இன்று மாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் உயிரிழந்த அஸ்வினியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இளம் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அஸ்வினி அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றி அதை படித்த போது, காவல் துறையினர் தன்னை கைது செய்ய விடுவார்கள் என்று பயந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் "ஐ மிஸ் யூ அம்மா" என அஸ்வினி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணைய தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படும் நைஜீரிய சைபர் கிரைம் கும்பலின் மோசடியில் இது ஒரு வகை என காவல் துறையினர் கண்டறிந்தனர்.
சமூக வலைதளங்களில் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி வேலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரா, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரா என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தாற் போல கிப்ட் அனுப்பி மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள். இந்த கும்பல் இளம்பெண்கள், இளைஞர்கள், விவாகரத்தான பெண்களை குறி வைத்து கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அஸ்வினியை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் மோசடி கும்பல் இருக்கும் இடத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்... உயிருடன் இந்திய மாணவியை புதைத்த காதலன்.. அதிர்ச்சி பின்னணி!