சென்னை அண்ணா நகர் 6ஆவது அவென்யூவில் வசித்து வருபவர், பால சுப்பிரமணியன் (45). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நிறுவனத்திற்கு சுலபமாக வந்து செல்வதற்காக, நிறுவனத்தின் சார்பாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் சொகுசு கார் ஒன்றை வழங்கியுள்ளனர்.
மேலும் பாலசுப்பிரமணியனுக்கு கார் ஓட்ட தெரியாததால், பகுதி நேர ஓட்டுநரை நியமித்து உள்ளார். இந்த ஓட்டுநர் இல்லாத சமயத்தில், பாலசுப்பிரமணியன் தங்கியிருக்கும் அப்பார்ட்மென்டிற்கு அருகே உள்ள குடியிருப்பு காவலாளி விஜய் ராம்(56) என்பவரை, கார் ஓட்டுநராகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மாலை பணியில் இருந்து வீட்டிற்கு பாலசுப்பிரமணியன் காரில் வந்துள்ளார். அப்போது கார் ஓட்டி வந்த விஜய் ராம், கார் சாவியை மறந்து வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன் சாவியை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் பாலசுப்பிரமணியன் காலையில் எழுந்து பார்த்தபோது கார் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆராய்ந்தபோது கார் செல்வது போன்ற காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இதனால், குற்றவாளியைப் பிடிப்பதில் சற்று கடினமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, திருடு போனது அதிநவீன சொகுசு கார் என்பதால், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே அதனை ஓட்டத் தெரியும் என காவல் துறையினர் யூகித்தனர். எனவே, பகுதி நேர ஓட்டுநர்களான இருவரையும் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காவலாளி விஜய்ராம் காரைத் திருடிச் சென்றதாக ஒப்புக்கொண்டார். விஜய் ராமிற்கு 2 லட்சம் ரூபாய் கடன் இருந்து வந்துள்ளதாகவும்; அதனைச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளதால், காரைத் திருடியதாகவும் தெரிவித்தார்.
மேலும், அம்பத்தூரில் ஒரு கார் தரகர் மூலம் காரின் விலையைப் பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அம்பத்தூர் விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த காரை மீட்டனர். பின்னர், விஜய் ராமை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.