சென்னை: இந்திய அரசுப் பணி, இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை 2021 ஜூலை மாதம் 5ஆம் தேதி வெளியிட்டது.
அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடு சான்றிதழ் வழங்குவதற்கு இந்திய அரசு வளமானப் பிரிவை நீக்கி நிர்ணயம் செய்துள்ளது. வருமான வரம்பை கணக்கிடும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அதிகாரிகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்காமல் உள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து கல்வியாளர் அஸ்வின் கூறும்போது, ’இதர பிற்பட்டோருக்கான சான்றிதழ் வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தில் பெறும் ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என விதி உள்ளது. ஆனாலும் அரசு அதிகாரிகள் அதனை புரிந்துகொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இதனை தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு தெளிவான புரிதலை வழங்கி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கினால் அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவியாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத், ஒடிசாவில் கரோனா பி.எஃப் 7 வைரஸ் கண்டுபிடிப்பு! - மீண்டும் கரோனாவா?