தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒரு வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உடலில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதால் ரத்தசோகை நோய் இந்த பருவத்தில் இல்லாமல் இருக்கும்.
இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரித்து, நல்ல நிலையை அடைவதற்கு உதவியாக இருக்கும். எனவேதான் ஒரே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு நாளை வழங்கப்படுகிறது. மாணவர்கள் குடற்புழு மாத்திரையை உண்டு விட்டனர் என்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களுக்கு உரிய நோய்கள் கண்டறியப்பட்டு அரசின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக் கூறினார்.