சென்னை: பீகாரை சேர்ந்த இனசேரே ஆலம் (27) என்பவர் சென்னையின் திரிசூலம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று (ஜனவரி 20) இரண்டாவது தளத்தில் வெளிபுற பகுதியில் கட்டட பூசு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
அதன்பின் வலியால் அலறி துடித்த அவரை சக தொழிலாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டை அகற்றினர். இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட குட்டமலை பகுதியில் மத்திய தொழில்படை பாதுகாப்பு போலீசார் (CISF) துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆலம் காலில் குண்டு பாய்ந்தது தெரியவந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை மற்றும் இந்த நடந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையயை சேர்ந்து உதவி காவல் ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.