சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள மருந்துக் கடையில் பணிபுரிந்து வருபவர், முகமது இத்ரிஸின். இவர் அண்ணா சாலையில் உள்ள கோட்டக் மகிந்திரா வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இன்று (அக் 7) காலை முகமது அவருடைய நன்பருக்கு யு.பி.ஐ மூலம் பணம் அனுப்பி உள்ளார்.
பின்னர், அவருடைய தொலைபேசிக்கு வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.753.48 கோடி இருப்புத் தொகை உள்ளதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக முகமது, வங்கியைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பின்னர், முகமது இத்ரிஸின் வங்கிக் கணக்கை கோட்டக் மகிந்திரா வங்கி முடக்கியுள்ளது. இதனால் முகமது தனது வங்கிக் கணக்கை கோட்டக் மகிந்திரா வங்கி முடக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து முகமது கூறுகையில், “நான் காலையில்தான் இந்த குறுஞ்செய்தியைப் பார்த்தேன். அதில் கோட்டக் மகிந்திரா வங்கியின் அண்ணா சாலை கிளையில் இருக்கும் என்னுடைய கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், என்னுடைய வங்கியின் செயலி மூலம் நான் அதை சரிதானா என்று பார்த்ததில், என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி இருப்புத் தொகை இருப்பதை உறுதி செய்தேன். இது நேற்று முதல் இந்த இருப்புத் தொகையானது இருந்து வருகிறது.
இதையும் படிங்க: குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை படைத்த நரிக்குறவர் சமுதாய மாணவர்!
நான் இதை காலையில்தான் பார்த்தேன். உடனடியாக இது குறித்து வங்கியை தொடர்பு கொண்டு பேசுகையில், எனக்கு சரியான விளக்கத்தை அவர்கள் அளிக்கவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கையும் தற்போது முடக்கி வைத்துள்ளார்கள். என்னுடன் அனுமதி இல்லாமல், வங்கி செய்யும் தவறுகளுக்கு என் கணக்கை முடக்குவது எப்படி நியாயம் ஆகும்?
மேலும் நான் காலையில் இருந்து தொடர்ந்து வங்கியின் வாடிக்கையாளாரின் சேவை மையத்தை அனுகியபோது, அவர்கள் விளக்கம் எதுவும் அளிக்கமால், "உங்களுடைய கணக்கு முடக்கப்பட்டது" என்று மட்டும்தான் கூறுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் இப்படி ஒரு குளறுபடி நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து - போக்குவரத்து துறை அறிவிப்பு!