சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய வளாகங்களில் 1,500 மான்கள் உள்ளன. இந்த மான்களை பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யவும் வனத்துறைக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று வனத்துறையின் முதன்மை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ”சென்னையில் ராஜ்பவன், ஐஐடி வளாகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகம் ஆகியவை புள்ளிமான்கள் போன்ற வனவிலங்குகள் வாழ தகுதியான இயற்கை சூழல்களாக இருந்து வந்தது. இந்த வளாகங்களில் மனிதர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் காரணமாக இங்கிருந்து மான்கள் வெளியேறும் சூழல் உருவானது.
இவ்வாறு வனப்பகுதியை விட்டு மான்கள் வெளியே வரும்போது, நாய்கள் கடித்து விடுவதாலும், உணவுகளை உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளை விழுங்கியும், கழிவுநீரை அருந்தியதன் காரணமாகவும், வாகனங்கள் மோதியும், மான்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு தரமணியில் 9 புள்ளி மான்கள் இறந்தன். அதன் உடலை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகள் செரிக்காமல் மான்களின் வயிற்றில் இருந்தது தெரியவந்தது. இதேபோல் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வாகனம் மோதியும், பிளாஸ்டிக்கை உண்டதாலும் 2 மான்கள் இந்தாண்டு உயிரிழந்துள்ளன.
மேலும் மத்திய தோல் ஆராச்சி நிறுவன வளாகத்தில் 32 புள்ளி மான்கள், சென்னை ஐஐடியில் 316 புள்ளி மான்கள் என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் சுமார் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன. அதிலும் ஐ ஐ டி வளாகத்தில் உயிரிழந்த மான்களை உடற்கூறு ஆராய்வு செய்த போது, மான்களின் வயிற்றுப்பகுதியில் இருந்து 4 முதல் 6 கிலோ வரையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு சென்னையில் உள்ள ஐஐடி, தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்கள் புள்ளி மான்கள் வாழ தகுதியற்ற இடங்களாக மாறியுள்ளதை கருத்தில் கொண்டே வனத்துறை மான்களை வேறு இடங்களுக்கு மாற்றி வருகிறது. கடந்த 2011-12ஆம் ஆண்டுகளில் மெட்ரோ பணிகளுக்காக சென்னை நந்தனத்தில் உள்ள கோழிகள் வளர்ப்பு ஆராய்ச்சி மைய வளாகத்தில் இருந்த 42 புள்ளி மான்கள் கிண்டி உயிரியல் பூங்காவிற்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.
இதேபோல், 2014-15ஆம் ஆண்டில் சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 323 புள்ளிமான்களை பிடித்து கிண்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு தரமணி பகுதியில் சுற்றித் திரிந்த 39 மான்கள் பாதுகாப்பாக எந்த காயங்களுமின்றி பிடிக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 32 மான்கள் உயிரிழந்தன. ஆனால் மேற்கூறிய இடமாற்ற நடவடிக்கையால் இந்தாண்டு 2 மான்கள் மட்டுமே உயிரிழந்துள்ளன. நகர வளர்ச்சி, வனப்பகுதி இல்லாத இடங்களில் கட்டுமானப்பணிகள் ஆகியவை காரணமாக ஆண்டுதோறும் 100 மான்கள் இறந்துவரும் நிலையில் அவை வாழத் தகுந்த சூழலுக்கு இடமாற்றுவது மிக அவசியமானது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இடமாற்றம் செய்வதால் மான்கள் இறப்பதாகத் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மான்கள் சரணாலயம் அமைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை