சென்னையில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் அதிகரித்துவருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி முழுவதும் இன்று 472 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 50 மருத்துவ முகாம்களும், ராயபுரத்தில் 46 முகாம்களும், திருவிக நகரில் 44 மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற 472 மருத்துவ முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 430 நபர்கள் பரிசோதிக்கப்பட்டததாகவும், அதில் 1991 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.