இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் நுரையீரலை நேரடியாகத் தாக்குவதால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலியில் வென்டிலேட்டர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இத்தாலியைப் போல் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால், நோயாளிகளுக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும் என்ற நிலையில் வென்டிலேட்டர்களின் தேவையும் அதிகரிக்கும். இப்போதைய சூழலில் வென்டிலேட்டர்களை எளிதில் தயாரிக்கவோ அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவதோ இயலாத காரியம்.
இதனைக் கருத்தில்கொண்டு ஒரே வென்டிலேட்டரில் நான்கு பேருக்கு சுவாசம் அளிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை தஞ்சாவூரிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. தேவைப்படுபவர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை வென்டிலேட்டர்களில் இணைத்துக்கொள்ளலாம் என அப்பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் மேலாண்மைத் துறை முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் நோய்த்தொற்று வரக்கூடாது என்பதே எல்லோருடைய எண்ணமாக இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் அதில் இருந்து காப்பதற்காக இது மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேவைப்படும் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் அவர் கூறியுள்ள இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்:
- anantharaman@sastra.edu
- info@sastratbi.in
இதையும் படிங்க: கோவிட்-19 : ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி!