கரோனா பரவல் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு ஆய்வு நடத்தியது.
இதையடுத்து இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவின் 21 மாநிலங்களில் அதிக பாதிப்பு உள்ள 69 மாவட்டங்களில் சீரோ-சர்வே (sero-survey) ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முதன்மைக் களப்பணியாளர்களை கொண்டு 'எலிசா' பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு உள்ளது என கண்டறியப்படுகிறது.
அந்த வகையில், சென்னை முதற்கட்ட ஆய்வு ஏற்கனவே முடிந்தது. இதில் சென்னையில் மொத்தம் 12 ஆயிரத்து 405 எலிசா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 2 ஆயிரத்து 673 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உள்ளது எனவும், அந்த முடிவை வைத்து பார்க்கும்போது சென்னையில் 21.5% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட ஆய்வின் முடிவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 6 ஆயிரத்து 389 எலிசா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 62 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உள்ளது எனவும், இந்த முடிவை வைத்து பார்க்கும்போது சென்னையில் 32.3% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று புதிதாக 3, 086 கரோனா பாதிப்புகள்! தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள்