தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாள்களாக குறைந்துவருகிறது. இதனை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்த குழந்தை முதல் 97 வயது மூதாட்டி வரை சிகிச்சை அளித்து அவர்களை தொற்றிலிருந்து பூரண குணமடைய செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துவருகின்றனர்.
இந்நிலையில், நுரையீரல் மிகவும் பாதிப்படைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இருவர் இன்று பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக ராஜிவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் வெங்கடேசன் (52) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூக்சுத் திணறலுடன் 11.09.20 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஏற்கனவே உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், பீட்யூட்ரி கட்டி பாதிப்பு இருந்தது. மேலும், அனுமதிக்கப்படும்போதே நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்களின் விடா முயற்சியினால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதன்காரணமாக அவரது உடல் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து 65 நாள்களுக்கு பின் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
இதேபோல், ஆதம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவர் மாரடைப்பு, உடல் பருமனால் அவதியுற்றிருந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு 23.09.20 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் நுரையீரல் 75 விழுக்காடு பாதிக்கப்பட்டு இருந்தது.
அவர் மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதன்காரணமாக அவரது உடல் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து 50 நாள்களுக்கு பின் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.