சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, இளங்கோவன் ஆகிய இருவரும், 18 வயதுக்கு குறைவான சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மட்டுமின்றி, நவாஸ், ஸ்டாலின் என்பவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சி.பி.சி.ஐ.டி. காவல் துறை வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகளான கிருஷ்ணவேணி, இளங்கோவன் ஆகியோருக்கு சிறுமியை கடத்திய குற்றச்சாட்டுக்காக ஒரு ஆயுள் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டுக்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், நவாஸ், ஸ்டாலின் ஆகியோருக்கு, தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணமாக ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஜார்ஜ் பொன்னையா வழக்குத்தொடர உயர் நீதிமன்றம் அனுமதி!