திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், ககுவூ வாடிஸ், ஆய்டா, லிசன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட், தி விண்ட், ரன்னிங் டூ தி ஸ்கை ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நாடுகள் வரிசையில், ஈரானிலிருந்து 11 திரைப்படங்களும், பிரான்ஸிலிருந்து 6 திரைப்படங்களும், ஹங்கேரியிலிருந்து 4 திரைப்படங்களும், சிலியில் இருந்து 2 திரைப்படங்களும், இந்திய பனோரமாவில் 4 தமிழ் திரைப்படங்கள் உள்ளிட்ட 17 திரைப்படங்களும், தமிழ் திரைப்படங்களுக்கான போட்டியில் 13 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
திரையிடப்படும் தமிழ்ப்படங்கள்
லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட்ஃபாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், சத்யம், #8 திருவிக சாலை, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை சென்னை-14 என்னும் முகவரியில், பிப்ரவரி 12 லிருந்து காலை 10.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பதிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.