சென்னை : கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஞாயிறு முழு ஊரடங்கிற்கு சென்னை உள்நாட்டு பயணிகள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில், பயணிகள் இல்லாமல் விமானநிலையம் வெறிச்சோடியதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று சுமார் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் குறைக்கப்பட்டு, குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கரோனா வைரஸ் மூன்றாவது அலைக்கு முன்பாக தினமும் 170இல் இருந்து 180 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கையும் தினமும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையில் இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதும் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
இன்று ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 81 விமானங்கள் புறப்பாடு, 81 விமானங்கள் வருகை என்று 162 விமானங்கள் ஆக குறைந்து விட்டன. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் குறைக்கப்பட்டு ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதைப்போல் இன்று பயணிகள் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து இன்னைக்கு 12,000 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.
சென்னையிலிருந்து ஆந்திரா மாநிலம் கர்ணூல் செல்லும் விமானத்தில் 2 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். ஆனால் கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில் வழக்கம் போல் ஒவ்வொரு விமானங்களிலும் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.
இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதி?- பயணிகள் போராட்டம்