பொறியியல் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சார்பில் தேர்வு எழுத காலநீட்டிப்பு அளிக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் பருவத்தில் மாணவர்கள் சிறப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.
அரசின் உத்தரவை ஏற்ற அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான சுற்றோலையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பியது. அதன்படி சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவதற்கான அட்டவணையை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடத்தப்பட்டன.
இதையடுத்து பல்கலைகழகம் சார்பில் பிப்ரவரி 6ஆம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வில் முறைகேடு நடந்ததும், இதற்காக அலுவர்கள் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டதும் தெரியவந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மார்ச் 12ஆம் தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட132 மாணவர்களுக்கும், அவர்கள் தேர்வு எழுதிய கல்லுாரிகளுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதி உள்ளதோடு, மாணவர்களையும் அழைத்து விசாரணையும் நடத்திவருகிறது.
இதையடுத்து தேர்வு முறைகேட்டிற்கு உதவியாக இருந்த கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவரை வேறு எந்த கல்லுாரியிலும் பணியில் சேர்க்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மார்ச் 19ஆம் தேதி அனைத்து தனியார் பொறியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் தீர்மானம் எண் 251.18 நாள் 6.2.2019 அடிப்படையில்,கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவர் 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2018 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்விற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எந்தக் கல்லுாரியிலும் பணியில் சேர்க்க வேண்டாம் என அதில் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.