செங்கல்பட்டு: சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, அடுத்த 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், 'நம்மை காக்கும் 48' சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
தமிழ்நாடு மக்கள் மட்டுமன்றி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெளி நாட்டவராக இருந்தாலும் இந்தத் திட்டத்தால் பயன் அடையலாம்.
பெரும்பாலான சாலை விபத்துகளில், கோல்டன் ஹவர் எனப்படும் முதல் சில மணி நேரங்களே விபத்தில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைக்கு உகந்த நேரம். ஆனால் பெரும்பாலான விபத்துக்களில் விபத்து நடைபெறும் இடங்களிலிருந்து அரசு மருத்துவமனைகள் தொலைவில் இருப்பதால், விபத்தில் காயமடைந்தவர்களை அங்கு கொண்டு செல்வதற்கு உண்டான காலவிரயம் இந்த திட்டத்தின் மூலம் தடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்பதால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு உண்டான முதல் கட்ட சிகிச்சையை, தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதற்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நாட்டிற்கு முன்னோடியான திட்டமாக விளங்கும்" என்றார்.
இதையும் படிங்க: நெல்லை பள்ளி விபரீதம்: 100 பள்ளிகளில், 200 கட்டடங்கள் இடிக்க உத்தரவு