செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் தனலட்சுமி நகர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்சிங் (24) என்ற இளைஞர் காவல் துறையினரை கண்டு இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இரண்டு மினி வேன்களில் குட்கா பொருள்களை ஏற்ற முயன்ற சென்னை வியாசர்பாடி ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் அர்ஜுனன் (50), புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதிர் என்பவரது மகன் முகமது ஜாபர் (36) ஆகிய வேன் ஓட்டுநர்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து, குட்கா பொருள்கள் கடத்த முயன்ற இரண்டு மினி வேன்களையும் அதிலிருந்த 24 மூட்டை பான்மசாலா, 45 பெட்டிகள் குட்கா பொருள்களையும் கூடுவாஞ்சேரி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதன் முக்கிய குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 24 குட்கா மூட்டைகள் பறிமுதல் : சரக்கு ஆட்டோவில் கடத்தல்