சென்னை: வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகள் 14 கோடி ரூபாய் கைப்பற்றினர். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் இன்று ஆஜராகியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, திமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி மற்றும் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கணினி, பென் ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், திமுக எம்பி-யுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் கடந்த 2ம் தேதி முதல் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரம்: மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு
அதில், காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து திமுக எம்பி கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.23) ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த் ஆஜராக வந்தார். அப்போது செய்தியாளர்களை பார்த்ததும் தனது காரில் ஏறிச் சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த கதிர் ஆனந்த், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
அவரிடம் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்த கேள்விகள் மட்டுமின்றி, பணம் பறிமாற்றங்கள் நடந்துள்ளதற்கான ஆவணங்களை காண்பித்தும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.