சென்னை: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினர் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் நயினார், "திமுக அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகளில் ஆகியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை, ஒன்றை கூட நிறைவேற்றவில்லை" என குற்றம் சாட்டினார். போக்குவரத்து துறையில் 30,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை, உடனடியாக நிரப்ப வேண்டும். வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை வழங்கிட வேண்டும். அதே போன்று மாநகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் 10% அளவிற்கு குறைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக 24 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாறி மாறி பேசி வருகிறார் என்றும் விமர்சித்தார். அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து கலந்து ஆலோசித்த பிறகு வேலைநிறுத்த போராட்டத்திற்கான நடவடிக்கைகளை ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சென்னை இணைச்செயலாளர் விஜயகுமார், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளரிடம் கூறுகையில், "பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தபடும் என தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார். ஊதிய உயர்வு ஓப்பந்த பேச்சுவார்த்தை 3 ஆண்டுக்கு ஒரு முறை நடந்து கொண்டிருந்த நிலையில் 4 ஆண்டுகளாக தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், 4 ஆண்டுகளை கடந்தும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்ததை இறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். அகவிலைபடி தொகையை கொடுக்க சொல்லி நீதிமன்றம் கூறியும் அரசு மேல்முறையீடாக சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.