கோவில்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மெயின் பஜாரில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. 2021-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்வேறு பொய்களை கூறி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. பெண்களுக்கு தாலி வழங்கிய கட்சி அதிமுக, தாலியை பறித்த கட்சி திமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம் ரூ 100 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு போலியான வாக்குறுதிகளை கூறி மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. தை திருநாளுக்கு 21 வகையான பொருட்களுடன் ரூ.100-ம் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன் பிறகு பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.100-ஐ ரூ.1000 ஆக மாற்றி மக்களுக்கு வழங்கியவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பின்னர், கொரோனாவுக்கு பிறகு வந்த பொங்கல் பண்கையை முன்னிட்டு பொங்கல் தொகுப்புடன் ரூ. 2500 பொங்கல் பரிசாக வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
பொதுமக்களின் மறதி தான் திமுகவிற்கு மூலதனம். 2021- ல் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஏமாற்ற வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக இன்னும் நிறைவேற்றவில்லை .திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய தற்போதைய முதல்வர் இப்போது மக்களுக்கு எதுவும் வழங்காமல் ஏமாற்றிவிட்டார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.