சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பாஜக தமிழக மாநில தலைவர் நேற்று (ஜன.21) மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை அரிட்டாபட்டி மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தலைவர்களை டெல்லி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசுவார்கள். மேலும் மக்களுக்கு மிக விரைவில் மகிழ்ச்சிகரமான தகவல் வர வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அரிட்டாபட்டியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தை அகற்ற வேண்டும். முழுமையாக கைவிட வேண்டும் என்ன கேட்டிருந்தார்கள்.
அதற்கும் உறுதி அளித்துள்ளோம். அமைச்சரிடம் பேசியுள்ளோம். அவரும் ஆதரவாக பேசியுள்ளார். டங்ஸ்டனை தடுக்க அனைத்து முயற்சியும் தமிழக பாஜக எடுக்கும். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி நல்ல மனிதர், அவர் வகுப்பறையில் மாட்டு கோமியம் பற்றி பேசி இருந்தால் அதற்கு கருத்து தெரிவிக்கும் கட்டாயம் ஏற்ப்பட்டிருக்கும். ஆனால், அவர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "வாய்வழி வாக்குறுதிகளை நம்பமாட்டோம்" - டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கோரிக்கை!
நான் மாடுகளை தெய்வமாக மதிக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட கருத்தை நான் வைத்துக் கொள்கிறேன். பொதுவெளியில் ஒரு கருத்தை திணிக்க வேண்டாம். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் இந்தியாவில் மிக சிறந்த கணிணித்துறை உள்ளிட்ட முக்கியமான ஆற்றல் படைத்தவர். இதனால் அவர் செய்துள்ள பல சாதனைகளை புறம் தள்ளிவிட்டு இந்த விவாகரத்தால் அவரை அறியப்படக்கூடாது.
தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர், அவருடைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட கருத்து தனிப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக் கொள்ளட்டும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகட்டும், அதை நான் பேச விரும்பவில்லை” என்றார்.