செங்கல்பட்டு: திருப்போரூர் வனத்துறையினருக்கு திமிங்கலத்தின் கொழுப்பான ஆம்பர் கிரீஸை சட்டவிரோதமாக நடைபெறும் விற்பனை குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட வன காவலர்கள் மாறுவேடத்தில் திருப்போரூர் வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
பொறி வைத்து பிடித்த வனத்துறை
அப்போது, அவர்கள் கடலூரைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இருந்து மற்றொரு கும்பல் திமிங்கலம் கொழுப்பை வாங்க திருப்போரூர் பகுதிக்கு வருவது தெரியவந்தது. அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்ததை அடுத்து, முதலில் பிடிப்பட்டவர்களுள் ஒருவரின் செல்போனில் பேசி, மற்றொரு கும்பலை மேலக்கோட்டையூர் வரவைத்து மடக்கிப் பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ் (34), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த அருள்முருகன் (30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ் (30), தாம்பரம் அடுத்த வெங்கபக்கத்தை சேர்ந்த டேனியல் (53), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா (43), சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த ராஜன் (51), நெற்குன்றத்தை சார்ந்த முருகன் (48), பூந்தமல்லி அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த மோகன் (50), கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (50) ஆகிய 9 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
13 கிலோ ஆம்பர்
கைதான அவர்களிடமிருந்து 13 கிலோ ஆம்பர் இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸின் மதிப்பு ரூ.13 கோடி என வன அலுவலகர்கள் தெரிவித்தனர். இந்த ஆம்பர் கிரீஸானது மருத்துவத்திற்கும், வாசனை திரவியங்களை தயாரிப்பதற்கும் பயன்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சியர் போல் பேசி ரூ.50 ஆயிரம் மோசடி முயற்சி - சைபர் கிரைம் விசாரணை