பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘மாநிலங்களின் உரிமைகளே, மத்திய அரசின் பெருமை’ என்ற முழக்கத்துடன் பாமக எதிர்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், கம்பீரமாகவும் வாழ முடியும். அதனை மீட்டுக் கொடுப்பது பா.ம.க.வின் நோக்கமாகும்.
காவிரி உரிமை, கல்வி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் திமுக ஆட்சியில் தான் தாரைவார்க்கப்பட்டன. இவை அனைத்தும் மீட்கப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவற்றைப் போலவே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமையை வென்றெடுக்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்குரிய பங்கை முழுமையாகப் பெற்றால் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும் .
இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறை நிறுவனமும் மத்திய அரசின் முயற்சியில் மட்டும் உருவாகிவிடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலங்களை மாநில அரசுகள் தான் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனைத்து வகைகளிலும் மாநில அரசுகள் உதவியுள்ளன. அதனால், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை, அவை அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவது தான் முறையானதாக இருக்கும்.
அதேபோல், மத்திய அரசுப் பணிகளிலும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களும், அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50 விழுக்காடும், கடைநிலை பணியிடங்கள் முழுமையாகவும், மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
அரசுப் பணிகளும், பொதுத்துறை நிறுவனப் பணிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவது அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்கள் தான். எனவே தான், மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
வேலைவாய்ப்புகளைப் போலவே ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர்., எய்ம்ஸ்., போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரின் இட ஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்கப் பாடுபடுவோம்” என அதில் கூறியுள்ளார்.