கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஏ.கே.போஸின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கைரேகை தொடர்பாக விசாரிக்க கூடாது என்றும், தேர்தல் வழக்கை மட்டும் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த 2018 ஆகஸ்ட் 2ஆம் தேதி மரணமடைந்தார். அதுகுறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு, இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதி விசாரணையை முடித்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மனுதாரர் டாக்டர் சரவணன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகனிடம் செய்யப்பட்ட முறையீட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறு எனவே இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்த கூடாது என இந்த வழக்கில் இதுவரை உத்தரவிடவில்லையே? என தெரிவித்து இந்த வழக்கில் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்குள் வழங்குவதாக கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவித்துள்ளது. மேலும், தன்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தனது 175 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. தற்போது, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் தொகுதிகளின் வழக்குகள் நிறைவடைந்துள்ள. சமீபத்தில் மாரடைப்பால் சூலூர் எம்.எல்ஏ கனகராஜ் மரணமடைந்த நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.