தமிழ்நாட்டில் பெருகிவரும் வாகன விபத்தைத் தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதுகாப்புக்காக கட்டாய தலைக்கவசம் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய தலைக்கவசம் சட்டத்தை அமல்படுத்த காவல் அலுவலர்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சில தினங்களுக்கு முன் பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். அவர்களில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிகிறது.
தலைக்கவசம் அணியாததால் நாளுக்கு நாள் விபத்தால் ஏற்படும் மரணத்தை தடுக்கும் வகையில், கட்டாய தலைக்கவசம் சட்டத்தை அமல்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனப் போக்குவரத்துக் காவல் இணை, துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
- இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட தலைக்கவசம் அணிவதில்லை. டெல்லி, பெங்களூருவில் கட்டாய தலைக்கவசம் சட்டம் அமல்படுத்தும்போது தமிழ்நாட்டில் ஏன் அமல்படுத்த முடியவில்லை?
- தொடர்ந்து சட்டத்தை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமைத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?
- வாகனத்தை பறிமுதல் செய்ய ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா?
- பெரும்பாலான காவல்துறையினர் ஹெல்மெட் அணிவதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபடுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த ஆறு மாதங்களில் தலைக்கவசம் அணியாதது தொடர்பாக நான்கு லட்சம் வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுவதாகவும், அதனை அதிகரிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார். தலைக்கவசம் அணியாத காவல் துறையினர் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.