தமிழ்நாட்டுக்கான ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாகியுள்ளன. சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களைக் கணக்கிட்டால் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தலா மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பலத்துடன் உள்ளன.
தற்போது இதற்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால் அதிமுக கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முகமது ஜான், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.