திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "என் மகள் வீட்டில் வருமானவரித் துறையினர் 30 பேர் புகுந்து சோதனை நடத்திவருகின்றனர். தேர்தலுக்கு மூன்று நாள்கள் இருக்கும் நிலையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி மிரட்டி அச்சுறுத்தி வீட்டில் முடக்கி வைத்துவிடலாம் என நினைக்கின்றனர்.
அது திமுகவினரிடம் நடக்காது. இன்னும் ரெய்டு நடத்துங்க. நீங்க ரெய்டு நடத்த, ரெய்டு நடத்த திமுக கிளர்ந்து எழும் மிசாவையே பார்த்த நான் வருமானவரித் துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். ஒன்னு மட்டும் மோடிக்குச் சொல்லிக்கிறேன்... இது திமுக; இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்" என்று தெரிவித்தார்.
ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்குச் சொந்தமான ஐந்து இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.