அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு உற்பத்தி செய்ய முக்கிய மூலக்கூறாக இருக்கிறது சுண்ணாம்புக்கல் சுரங்கம். இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு, கடந்த 1982ஆம் ஆண்டு ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஏக்கருக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்பட்டது .
அதுவும் தவணை முறையில் கொடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வப்போது நில உரிமையாளர்களுக்கு அரசு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு வேலை வழங்கவில்லை. தற்போது கடந்த மாதம் தொழில்துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில் 50 தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்கி வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாவட்டங்களிலிருந்து ஆலைக்கு நிரந்தர தொழிலாளர்களை நியமித்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கிராம மக்கள் ஆனந்தவாடி கிராமத்திலுள்ள சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். இதனால் சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது நிரந்தர வேலை கொடு இல்லையேல் நிலத்தை திருப்பி கொடு என விவசாயிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: போலி சிமெண்ட் தயாரித்து விற்பனை செய்த கட்டடத் தொழிலாளி கைது..!