2018ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 8.54 கோடி பனை மரங்கள் இருந்தன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5.10 கோடி மரங்கள் இருந்துள்ளன.
பனையால் விளையும் பொருள்கள் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி ஈட்டப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேளாண்மைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளைக் கொண்ட தொழிலாகப் பனைத்தொழில் விளங்குகிறது. ஆனால், தற்போது பல கோடி மரங்கள் செங்கல் சூளைகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் அழிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் அழிந்துவரும் பனை மரங்களைக் காக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதில், பாளைய பாடி அன்புடன் அக்னிசிறகுகள், நெருஞ்சி கோரை ஸ்வீட் பாய்ஸ், கரைவெட்டி இருபது-20 இளைஞர்கள், சோலைவனம் அமைப்பினர் எனப் பல்வேறு இளைஞர்கள் 2018ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை சுமார் 40 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் கரூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சுமார் 25 ஆயிரம் விதைகள் வரை அளித்துள்ளனர். மேலும் இவ்வாண்டு சுமார் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க உள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த கஜா புயலின்போது ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் சாய்ந்தன. ஆனால் ஒரு பனை மரம்கூட சாயவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க முதன்முறையாக பனை மரம் நடுவதில் ஈடுபட்டதாகவும், பின்னர் வரும் சந்ததியினருக்காகப் பனை மரம் நடுவதாகவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் தங்களது ஊரில் உள்ள ஏரிக்கரை வாய்க்கால் ஓரம் மரம் நட்ட இளைஞர்கள் தற்போது மாவட்டம் முழுவதும் பனை மரம் நடுவது என முடிவெடுத்து செயல்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:
பயணிகளை அச்சுறுத்தும் கல்லட்டிப் பாதை : விபத்துகளைத் தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!