அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுத் தாக்கத்தால் விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது. அதற்காகத் தமிழ்நாடு அரசு இழப்பீடும் வழங்கியது.
இதனிடையே, இந்தாண்டும் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுத் தாக்கத்துக்கு உள்ளானது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. மானாவரிப் பயிரான மக்காச்சோளம் பயிரிட எளிதாக இருப்பதால் அதனை விவசாயிகள் பயிரிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்காச்சோளப் பயிர்கள் பயிரிடப்பட்டு 20 நாள்களான நிலையில் வளர்ந்திருந்த சிறிய அளவிலான மக்காச்சோளச் செடியிலும் படைப்புழுவின் தாக்குதல் அதிகமுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு, மூன்று முறை மருந்து அடித்திருந்தாலும் படைப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இதைத் தடுக்க விவசாய அலுவலர்கள் கொடுத்த இனக்கவர்ச்சிப் பொறியாலும் அவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே இதற்கான காரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கண்டறிந்து படைப்புழுவின் தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும் என்று கூறும் விவசாயிகள், அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தாங்கள் வாங்கிய கடனுக்குப் பணம் செலுத்த முடியாமலும் வாழவும் முடியாமலும் போகும் என வேதனைத் தெரிவிக்கின்றனர்.
மேலும் உள்நாட்டு மக்காச்சோள விதைகளை தங்களுக்கு அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என விருப்பம் தெரிவித்த அவர்கள், எனவே விவசாய அலுவலர்கள் வருங்காலங்களில் பாரம்பரிய மக்காச்சோள விதைகளை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மழை, வெயில் என மாறி மாறி வருவதால் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை; அரசு விரைந்து இப்பிரச்னையில் கவனம் செலுத்தினால் மட்டுமே வருங்காலங்களில் படைப்புழுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றனர்.