சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டுவரும் மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டிலுள்ள அகபல்கோ நகரில் நடைபெற்றுவருகிறது.
இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், சக நாட்டவரான டொமினிக் கொய்ஃபெரை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஸ்வெரவ் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இரண்டாவது செட் ஆட்டத்தின்போது அகபல்கோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒரு சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 5.7ஆக பதிவாகியுள்ளதாக மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிலும், நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்திலும் வீரர்கள் தொடர்ந்து விளையாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இருப்பினும் இரண்டாவது செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் 7-5 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். இதன்மூலம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கொய்ஃபெரை வீழ்த்தி, மெக்ஸிகன் ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: ‘நடப்பது அனைத்தும் அதிசயம் போல் உள்ளது’ - ஜஸ்பிரித் பும்ரா