சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ஜோக்கோவிச்சும், மூன்றாம் இடத்தில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும் உள்ளனர்.
டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரருக்கு அடுத்தபடியாக அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்தான் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால். அவர் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் எதிரில் விளையாடும் வீரர்களை திணறடிக்கும் திறமைப்படைத்த நடால், நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் தோல்வியுற்றார்.
இருப்பினும் அவர் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி அதிகமுறை (12) அந்த பட்டத்தைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் யு.எஸ்.ஓபனிலும் சாம்பியன் மகுடத்தை சூடினார். சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் தொடரின் அரையிறுதி வரை முன்னேறிய நடால் காயம் காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.