ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் கனடாவின் மான்ட்ரெல் நகரில் நடைபெற்றுவந்தது. இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப்போட்டியில் காயத்தால் ஃபிரான்சின் மான்ஃபில்ஸ் போட்டியிலிருந்து விலகியதால் நடப்புச் சாம்பியனான ரஃபேல் நடால் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் வெற்றிபெற்ற ரஷ்யாவின் மெட்வதேவும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷ்யாவின் மெட்வதேவ் ஆகியோர் மோதினர். இதில் நடால் முதல் செட்டிலேயே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவர் அந்த செட்டை 6-3 என எளிதாகக் கைப்பற்றினார்.
அடுத்த செட்டிலும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-3, 6-0 என நேர்செட்களில் மெட்வதேவை வீழ்த்திய நடால் ஐந்தாவது முறையாக ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றினார். முன்னதாக 2005, 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் அவர் இந்தக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் அதிகமுறை (35ஆவது முறை) 'ஏடிபி மாஸ்டர்ஸ் 1000' பட்டம் வென்ற வீரர் என்ற பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். அவர் இந்த வருடம் ரோம், பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.