ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பதால் இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், ரஷ்யாவைச் சேர்ந்த கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் இரண்டு செட்டை 6-2, 7-6 என்ற கணக்கில் வென்ற நிக் கிர்ஜியோஸ், மூன்றாவது செட்டை 6-7 என்ற கணக்கிலும் நான்காவது செட்டை 6-7 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தார்.
இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் இரு வீரர்களும் தங்களது முழுபலத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் நிக் கிர்ஜியோஸ் சூப்பர் டைபிரேக்கர் முறையில் ஐந்தாவது செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார்.
இதன்மூலம், நிக் கிர்ஜியோஸ் 6-2, 7-6, 6-7, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்றுப் போட்டியில் அவர் உலகின் முதல் நிலை வீரரும் ஸ்பெயினின் நட்சத்திர வீரருமான ரஃபேல் நடாலை எதிர்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா ஓபனில் சதமடித்து அசத்திய ஃபெடரர்!