மல்யுத்த வீரர் சாகர் ராணா தன்கட்டுக்கும், சுஷில்குமாருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கி விட்டுத் தப்பியோடினர்.
படுகாயங்களுடன் கிடந்த சாகர் ராணா தன்கட்டை மற்றொரு நண்பரான சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுஷில்குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுஷில்குமாரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மே.23ஆம் தேதியன்று டெல்லி காவல்துறையின் தனிப்படை அவரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "விசாரணையில், சுஷில்குமார் தன்னை நிரபராதி என்றே கூறிக்கொண்டு இருந்தார். சுற்றியிருந்தவர்கள் பேச்சைக் கேட்டுத் தான் மறைந்திருந்ததாகவும், ஒரு போதும் கொலை செய்யும் எண்ணம் கிடையாது எனக் கூறினார். அவர், மனதளவில் வலிமையானவர் என்பதால், உளவியல் நிபுணர் உதவியுடன் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.