ஓரிகன் (அமெரிக்கா): உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள ஓரிகன் நகரில் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ட்ரிபிள் ஜம்ப்-இல் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றுப்போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூலை 22) காலை நடைபெற்றது.
தகுதிச்சுற்றில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் எல்தோஸ் பால், பிரவீன் சித்ரவேல் ஆகியோர் 'ஏ' பிரிவில் இடம்பெற்றார். மற்றொரு இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் 'பி' பிரிவில் இடம்பெற்றனர். 17.05 மீட்டரை தாண்டினால் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறலாம். இல்லையெனில், இரு பிரிவுகளிலும் சிறந்த 12 வீரர்கள் இறுதிப்போட்டிக்குப் பட்டியலிடப்படுவார்கள்.
இந்நிலையில், எல்தோஸ் பால் 16.68 மீட்டருக்குத் தாண்டி குரூப் 'ஏ' 6ஆவது இடத்தையும், ஒட்டுமொத்தமாக 12ஆவது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.
பிற இரண்டு இந்திய வீரர்களான பிரவீன் சித்ரவேல் 16.49 மீட்டர் தூரத்தையும், ஆபூபக்கர் 16.45 மீட்டர் தூரத்தையும் தாண்டினர். பிரவீன் 'ஏ' ஒட்டுமொத்தமாக 17ஆவது இடத்தையும் ('ஏ' பிரிவில் 8ஆவது இடம்), அபூபக்கர் 19ஆவது இடத்தையும் ('பி' பிரிவில் 10ஆவது இடம்) பிடித்து இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறாமல் ஏமாற்றமளித்தனர்.
25 வயதான எல்தோஸ் பால், 16.99 மீட்டர் என்ற ரெக்காடை வைத்துள்ளார். இது கடந்த ஏப்ரல் மாதம் ஃபெடரேஷன் கோப்பைத் தொடரில் தங்கம் வென்றபோது பதிவு செய்த தூரமாகும். முன்னதாக, விசா பிரச்னை காரணமாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க எல்தோஸ் பாலுக்கு சிக்கல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த தங்கத்தை நோக்கி நீரஜ் - இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்