ரியாத்: உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவருகின்றன. இந்த தொடரின் 5ஆவது போட்டி குரூப் சி அணிகளான அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா இடையே நேற்று (நவம்பர் 22) நடந்தது. முதல் பாதியில் 10ஆவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணி பெனால்டி கிக் மூலம் கோல் அடித்தது. இந்த கோலை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி அடித்தார்.
அந்த வகையில், முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது. அதன்பின் 2ஆவது பாதியில் சவுதியின் சலே அல் ஷெஹ்ரி மற்றும் சேலம் அல்-தவ்சாரி தலா ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியை சவுதி அரேபியா கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கொண்டாடிவருகின்றனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதி அரேபியா மன்னர் சல்மான் இன்று(நவம்பர் 23) நாடு முழுவதும் விடுமுறை அறிவித்தார். அந்த வகையில், சவுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிலாளர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, சவுதி அரேபியா அணி வெற்றிபெற்ற உடன் ரியாத் நகரம் முழுவதும் மக்கள் ஆராவாரத்துடன் கொண்டாடினர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் விளக்குகள் போடப்பட்டும், ஹாரன்கள் அடிக்கப்பட்டும் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக சவுதி அரசால் நடத்தப்படும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபிஃபா: சவுதி அரேபியா வெற்றி... மெஸ்ஸி ரசிகர்கள் கவலை...