டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.டி.டி.எஃப் (சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம்) வெளியிட்டுள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில், 28ஆவது இடத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த இந்திய வீரர் சத்யன் நான்கு இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதன்மூலம், டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், முதல் 25 இடத்திற்குள் இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். சமீபகாலமாக, டேபிள் டென்னிஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சத்யன், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய டேபிள் டென்னிஸ் கோப்பையில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சீனாவின் செங்குடுவில் அக்டோபர் 25 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் தகுதியையும் இவர் பெற்றுள்ளார். அதேபோல், மற்றொரு சென்னையைச் சேர்ந்த இந்திய வீரரான சரத் கமல் 37ஆவது இடத்தில் இருந்து 46ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.