பிஎம்எக்ஸ் ரேசிங் என்ற சாகச சைக்கிள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாதுரஸ்ட்டில் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய நட்சத்திர சைக்கிள் பந்தய வீரர் கை சகாகிபரா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கேன்பராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் தற்போது கோமா நிலையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவரது குடும்பத்தார் வெளியிட்ட அறிக்கையில், ”சகாகிபராவின் நிலைமை மோசமாக உள்ளது. இனி வரும் காலம் நீண்டதாகவும் கடுமையான ஒன்றாகவும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதை நாங்கள் நேர்மறையாக எடுத்துச்செல்வோம்.
இந்தத் தருணத்தில் எங்களால் வேறு எதையும் செய்ய இயலாது. சகாகிபராவுக்கு உங்களது ஆதரவு வேண்டும். தற்போது சகாகிபராவின் உடல்நலத்தைச் சரிசெய்து அவரை எவ்வாறு மீட்டுவது என்பது குறித்தே நாங்கள் கவனம் செலுத்திகிறோம். தற்போதைக்கு அவரது சாகசப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
23 வயதான கை சகாகிபரா, உலகளவில் தற்போது பத்தாவது இடத்தில் உள்ளார். மேலும் இந்தாண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பிஎம்எக்ஸ் பிரிவில் அவர் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவருக்கு நடந்தேறிய இந்த விபத்து அவரது ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல் - காரணம் என்ன?