2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடருக்குத் தயாராகும் விதமாக இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இப்போதே தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியைத் தொடங்கவுள்ளனர்.
இது பற்றி ஹாக்கி அணியின் ஃபார்வெட் வரிசையில் ஆடும் குர்ஜண்ட் சிங் பேசுகையில், ''எஃப்ஐஹெச் தொடரில் நெதர்லாந்து, பெல்ஜியன் ஆகிய அணிகளுடன் ஆடியது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. அதன்பின்னர் என் ஆட்டம் இன்னும் கொஞ்சம் துல்லியம் இருக்க வேண்டும் என உணர்ந்தேன். அடுத்து வரவுள்ள சில மாதங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை. ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக நான் ஹாக்கி அணியில் இருப்பதற்குத் தகுதியானவன் என்று அனைவருக்கும் தெரியும் வகையில் செயல்பட விரும்புகிறேன்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்தே அனைவரும் பயோ பபுள் சூழலில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளோம். அதனால் சில பகுதிகளுக்கு மட்டுமே எங்களால் செல்ல முடியும். இதன் விதிமுறைகள் கொஞ்சம் கடினமாகதான் உள்ளன. கடைசி ஒன்பது மாதங்களில் அணியினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இப்போது அனைவரும் ஒன்றாக உள்ளோம். வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அனைவரும் குடும்பம்போல் உணர்கிறோம்.
பயிற்சியாளர் கிரஹம் ரெய்ட் கூறுயது போல், இந்த நேரத்தினை நன்றாக பயன்படுத்திக் கொண்டு, எங்கள் அணிக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். இந்த ஒன்பது மாதங்களில் என்னால் எந்த இடங்களில் எல்லாம், சரியாக ஆட முடியவில்லை என்பது தெரியும். சுனில், ஆகாஷ்தீப், ராமன்தீப் ஆகியோர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க: ”மரடோனாவின் மனநிலை சீராக உள்ளது” - மருத்துவர் தகவல்