கால்பந்து விளையாட்டில், பீலே, மரடோனா ஆகியோருக்கு அடுத்தபடியாக தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் மெஸ்ஸி என்று கூறினால் அது மிகையாகாது.
அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் ஜுன் 24, 1987இல் பிறந்த இவர் தனது மூன்று வயதிலேயே கால்பந்து விளையாடத் தொடங்கினார். இடது கால் ( Left footed player) வீரரான இவர் சிறுவயதிலேயே பந்தைக் கட்டுப்படுத்துவது, கடத்துவது, டிஃபென்டர்களைக் கடந்து கடினமான கோல்களைக் கூட எளிதாக அடிப்பது எல்லாம் இவரது காலுக்கு வந்த கலை.
சிறுவயதில் தனது சிறப்பான ஆட்டத்தால் நெவல்ஸ் அணிக்காகப் பல கோல்களை அடித்துள்ளார். 13ஆவது வயதில் இவருக்கு ஹார்மோன் குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது. இவரது மருத்துவச் செலவை ஏற்க ஸ்பெயினின் பார்சிலோனா அணி முன்வந்தது.
இதன் காரணமாக இவர் 2000 ஆண்டில் பார்சிலோனாவின் ஜூனியர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். தனது திறமையான ஆட்டத்தால், 2005இல் பார்சிலோனா சீனியர் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்றார்.
அன்றிலிருந்து கால்பந்து விளையாட்டில் தனக்கான புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார். இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் இவரது மேஜிக் குறைந்தபாடில்லை.
கோல் அடிப்பது மட்டுமில்லாமல், அசிஸ்ட் வழங்குவதும், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஸ் செய்வதும் என ப்ளே மேக்கராகத் திகழ்கிறார். இந்த 15 ஆண்டுகளில் தலா ஆறு கோல்டன் பூட், பலான் டி ஆர் விருதுகளை வென்ற ஒரே வீரர் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.
கால்பந்து விளையாட்டை இந்த அளவிற்குச் சிறப்பாக விளையாட முடியுமா என யோசித்து பார்க்க முடியாத அளவில் விளையாடிவரும் அவர் தனது 33ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.
மெஸ்ஸியின் ஆட்டத்திறன் குறித்து எழுதவோ, விவரிக்கவோ வேண்டுமா? அதைப் பார்த்தால் போதும் - மெஸ்ஸி குறித்து பெப் குவார்டியாலா (மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர்) கூறிய வார்த்தைகள் இவை. பெப் குவார்டியாலா கூறியதைப் போலவே மெஸ்ஸியின் ஆட்டத்திறனைப் பார்த்தால் போதும், ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் மேஜிக் செய்யும் உணர்வு நமக்கு வரும்.